மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா : பக்தர்கள் கடலில் மிதந்து வந்த தேர்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, நேற்று கோலாகலமாக நடந்தது. மாசி வீதிகளில் ஆடி அசைந்து வந்த தேர்களை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
சித்திரை திருவிழா, ஏப்.,28 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாள் திருவிழாவின் எட்டாம் நாள் திருவிழாவான மீனாட்சி பட்டாபிஷேகம், மே 5ல் நடந்தது. அன்று முதல் (சித்திரை முதல் ஆவணி) நான்கு மாதங்கள், பட்டத்தரிசியாக, மதுரை ஆட்சிப்பொறுப்பை மீனாட்சி ஏற்றார் என்பது ஐதீகம். மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக, மதுரையில் அவதரித்து, ஆட்சி புரிகையில் திக்கு விஜய புராண வரலாற்று நிகழ்வினை குறிக்கும் அம்மனின் திக்கு விஜயம், ஒன்பதாம் நாள் விழாவான மே 6ல் நடந்தது. பத்தாம் நாள் விழாவான மீனாட்சி சொக்கர் திருமணம் நேற்று முன்தினம் நடந்தது.
மாசி வீதிகளில் தேரோட்டம் : பதினோறாம் நாள் விழாவான திருத்தேர் திருவிழா, இறைவனின் சங்காரம் (மறைத்தல், அருளல்) குறித்து நடைபெறுவதாக ஐதீகம். ஆன்மாக்களுக்கு உயர்வு நல்கி வருவதை குறிப்பதாக அமையும். சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்வாக, திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, கீழமாசி வீதி தேர்முட்டியில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு நேற்று அதிகாலை 4:50 மணிக்கு வெண்பட்டு, ரோஸ் நிற முண்டாசு கட்டி சுவாமியும், நீல நிற பட்டு, நீல நிற முண்டாசு கட்டி பிரியாவிடையும் எழுந்தருளினர். அடுத்ததாக அலங்காரத் தேரில் சிவப்பு பட்டு, சிவப்பு முண்டாசு கட்டி, சர்வ அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். சிவனடியார்களின் சங்கொலி முழங்க, மங்கல நாதஸ்வரம் மேளம் இசைக்க, மீனாட்சி சுந்தரர் கோஷம் விண்ணை பிளக்க, பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள, காலை 6:00 மணிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, பக்தர்களின் கடலில் மிதந்து வந்த படி திருத்தேரோட்டம் மாசி வீதிகளில் கோலாகலமாக நடந்தது. சுவாமி பிரியாவிடை தேர் மதியம் 12:00 மணிக்கும், அம்மன் தேர் மதியம் 12:30 மணிக்கும் நிலையை அடைந்தது.
திருவிழா இன்று நிறைவு : பன்னிரெண்டாம் நாள் விழாவான தீர்த்தவாரி உற்சவம், இன்று நடக்கிறது. சுவாமி பிரியாவிடை, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயில் திருக்கல்யாண மண்டபம் லட்சுமணன் சிவராமன் மண்டகப்படியில் காலையிலும், நான்கு மாசி வீதிகளில் இரவு 7:00 மணிக்கும் எழுந்தருள்கின்றனர். பொற்றாமரைக்குளத்தில் தீர்த்தவாரி, தேவந்திர பூஜை முடிந்து, இரவு 9:00 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் வடக்காடி வீதி 16 கால் மண்டபத்தில் விடை பெற்றுக்கொள்ளும் வைபவம் நடக்கிறது. இந்தாண்டு சித்திரை திருவிழா இன்று நிறைவு பெறுகிறது.
இன்று கள்ளழகர் எதிர்சேவை : மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரை விழாவை முன்னிட்டு, இன்று (மே 9) காலை 6:00 மணிக்கு மூன்று மாவடியில், கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் பல்லக்கில் பவனி வரும் எதிர்சேவை நடக்கிறது. காலை 9:00 மணி புதூர்
மாரியம்மன் கோயில், மதியம் 12:00 மணி ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில், மாலை 5:00 மணி அவுட்போஸ்ட் மாரியம்மன் கோயில், மாலை 5:30 மணி அம்பலகாரர் மண்டபத்தில் கள்ளழகர்
எழுந்தருள்கிறார். மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இருந்து வாண வேடிக்கை நடக்கிறது. இரவு 9:30 மணிக்கு, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில், கள்ளழகர் எழுந்தருள்கிறார். நாளை காலை 6:15 மணிக்கு மேல் காலை 7:00 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில், வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.