ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா போலீசார் குவிப்பு
ADDED :3116 days ago
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகரில் பழமையான கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா, கடந்த, 25ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, பக்தர்கள் வாயில் அலகு குத்தியும், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், முதுகில் அலகு குத்தி தொங்கியபடி கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி, இன்று (மே 9) நடக்கிறது. இதனால் ராம்நகர், ஏரித்தெரு, ராமநாயக்கன் ஏரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடும் கூட்ட நெரிசல் இருக்கும் என்பதால், போக்குவரத்தை மாற்றியமைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், பாதுகாப்பு பணிகளுக்காக, 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.