பழமை வாய்ந்த கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்
ராசிபுரம்: பழமை வாய்ந்த சிங்களாந்தபுரம் திருவேஸ்வரர் கோவிலில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. ராசிபுரம் அடுத்த, சிங்களாந்தபுரத்தில், 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருவேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று சுவாமிக்கு திருக்கல்யாணம், உற்சவர் திருவீதி உலா நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு பவுர்ணமி நாளில் உலக மக்களின் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டியும் சிறப்பு யாகம் நடந்தது. கோவில் சிவாச்சாரியார் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். கணபதி யாகத்துடன் துவங்கி, 108 மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்கள், யாகத்தில் படைக்கப்பட்டு பின்னர் பூர்ணாகதி செய்யப்பட்டது. தொடர்ந்து, பங்கஜவள்ளி, திருவேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்து, முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தனர். இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.