கோவிந்தா கோஷம் முழங்ககள்ளழகர் கோயில் திரும்பினார்
பரமக்குடி,:பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் (அழகர்)கோயில் சித்திரை திருவிழாவில், பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை முட்ட கோயிலுக்கு திரும்பினார்.மே 10 இரவு 3:18 மணிக்கு பூப்பல்லக்கில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர், காலை 9:05 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி வரவேற்றனர். பின்னர் சேஷ, கருட வாகனம், பட்டுப்பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்திலும் மற்றும் தசாவதார சேவையில் அருள்பாலித்தார். நேற்று பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, தங்க நெல் மணி தோரணம் சூடி, ஈட்டி, வளரி, கத்தி, கேடயம், தடி, வாள் ஏந்தி காட்சியளித்தார். அப்போது வெட்டிவேர், மல்லிகை, கனகாம்பர பந்தலிட்ட பூப்பல்லக்கில் காலை 8 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து புறப்பட்டார்.
பின்னர் மாலை 5 மணி வரை முக்கிய வீதிகளில் அழகர் வீதி உலா நடந்தது. கருப்பண்ணசாமியிடம் விடை பெற்றுச் சென்ற அழகர், அவரிடம் உத்தரவு பெற்று சிறப்பு தீபாராதனைகளுடன் மீண்டும் கோவிலுக்கு திரும்பினார். பக்தர்கள் கோவிந்தா கோஷம் விண்ணதிர அழகரை வரவேற்றனர். இரவு கண்ணாடி சேவை நடந்தது. இன்று பகல் உற்சவ சாந்தி, நாளை காலை பாலாபிஷேகம், இரவில் பெருமாள் பூப்பல்லக்கில் வீதியுலா நடக்கிறது.