உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பருவ மழை பொய்த்துப்போனதால் இந்தாண்டு தெப்பத்திருவிழா இல்லை

பருவ மழை பொய்த்துப்போனதால் இந்தாண்டு தெப்பத்திருவிழா இல்லை

கீழக்கரை, உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இங்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் வாய்க்கப்பெற்றது. முதன்முறையாக கடந்த 2015ல் சித்ரா பவுர்ணமி நிறைவு பெற்று மூன்று நாட்களில் தெப்பத்திருவிழா நடந்தது. கோயிலுக்கு இடதுபுறத்தில் உள்ள அக்னி தீர்த்த தெப்பக்குளத்தில் இரவு 7:00 மணிக்கு ராஜமரியாதையுடன் மூலவரை அழைக்கும் அனுக்ஞை பூஜை, பின்னர் பிரியாவிடையுடன் மங்களநாயகி சமேதராக மங்களநாத சுவாமி சயனக்கோலத்தில் அக்னி தீர்த்தக் குளத்தில் தெப்பத்தில் எழுந்தருள்வார். வேத பாராயணம், கைலாச வாத்தியங்கள், மாணிக்கவாசகர் பாடி அருளிய திருபொன்னுஞ்சல் ஆகியவை பாடப்படும். 50 அடி உயரம் கொண்ட மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் நடக்கும். நீர் நிரம்பியிருக்கும் போது 35 அடி ஆழம் கொண்ட குளத்தில் நடந்த, இவ்விழா தற்போது நிலவும் வறட்சியால் குளம் வற்றி, குறைந்த அளவே நீர் உள்ளதால், தெப்பத்திருவிழா நடத்த இயலாத நிலையில் உள்ளது. சிவாச்சாரியார் கூறுகையில், வருகின்ற ஆண்டில் நல்ல முறையில் பருவமழை பெய்து, பூமியில் வளம் கொழிக்கவும், நீர் நிரம்பி காட்சிதரும் வேளையில் தெப்பத்திருவிழா நடக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !