மாரியம்மன் கோவில் திருவிழா: இன்று கம்பம் ஆற்றுக்கு விடுதல்
கரூர்: கரூர், மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழாவை முன்னுட்டு, இன்று மாலை, கம்பம் ஆற்றுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. கரூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், கடந்த, 14ல் கம்பம் நடுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, பூச்சொரிதல், காப்பு கட்டுதல், மகாசண்டி யாகம், மறு காப்பு கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது; நேற்று அமராவதி ஆற்றில் இருந்து, பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். மேலும், கரும்பில் தொட்டில் கட்டி, குழந்தைகளை பெற்றோர் கோவிலுக்கு தூக்கிச் சென்று, நேர்த்திக்கடன் செலுத்தினர். நீண்ட வரிசையில் நின்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில், பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டன. இன்று மாலை, 5:15 மணியளவில், கோவிலில் இருந்து கம்பம் அமராவதி ஆற்றுக்கு கொண்டு செல்லுதல், வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார், பக்தர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.