பழநி கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கி வழிபாடு
ADDED :3093 days ago
பழநி, பழநி அருகே பெரியகலையம்புத்துார் ஐகோர்ட் பத்ர காளியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இங்கு பூக்குழி இறங்கும் விழாவை முன்னிட்டு கொடியேற்றமும், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் 3 நாட்களாக நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பூக்குழி இறங்கும் விழா நடந்தது. இதையொட்டி பெரியவர்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்து 200 பக்தர்கள் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். இதேபோல மாவிளக்கு எடுத்தும், அங்கப்பிரதட்சணை செய்தும், நுாற்றுக்கும் மேற்பட்டோர் கிடா வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.