பெரியமாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
கருமந்துறை: பெரியமாரியம்மன் கோவிலில், தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா, சின்னகல்வராயன் மலை, தெற்கு நாடு பஞ்சாயத்து, பகுடுப்பட்டு பெரியமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 28ல் தொடங்கியது. அன்று, சுவாமி அழைத்தலும், 29ல் பால்குடம் எடுத்தல் மற்றும் பூந்தேர் சத்தாபரணம் நடந்தது. நேற்று
முன்தினம், பொங்கல் வைத்தல் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு மேல் கிடா வெட்டுதல், 10:00 மணிக்கு அலகு குத்துதல், அக்னி கரகம் எடுத்தல் நடந்தது.
மதியம், 3:00 மணிக்கு, தேர் வடம் பிடித்து, முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலம் வந்தது. இதில் கருமந்துறை, கரியகோவில், சூலாங்குறிச்சி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள்,
சுவாமியை தரிசித்தனர்.
* பெத்தநாயக்கன்பாளையம் அருகே, தும்பலில், மதுரை வீரன் மற்றும் சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், நேற்று அலகுகுத்தி,
நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை, 6:00 மணிக்கு கிடா வெட்டுதல், மதியம், 2:00 மணிக்கு அக்னி கரகம் எடுத்தல், அலகு குத்துதல் நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு சிறப்பு பூஜை,
நாளை மதியம், 2:00 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.