உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை நடை 14ம் தேதி திறப்பு: 25ல் தங்க கொடிமர பிரதிஷ்டை

சபரிமலை நடை 14ம் தேதி திறப்பு: 25ல் தங்க கொடிமர பிரதிஷ்டை

நாகர்கோவில்:  சபரிமலை நடை வரும் 14ம் தேதி மாலை திறக்கிறது. தொடச்சியாக 24 நாட்கள் பூஜைகள் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக 25ம் தேதி தங்க கொடிமர பிரதிஷ்டை நடைபெறுகிறது.

ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும் 14ம் தேதி மாலை ஐந்து மணிக்கு திறக்கிறது. ஏற்கெனவே உள்ள முறைப்படி பூஜைகள் முடிந்து 19ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட வேண்டும். ஆனால் கொடிமர பிரதிஷ்டைக்கான முன்னோடி சடங்குகள் 20ம் தேதி தொடங்க இருப்பதால் தொடர்ச்சியாக நடை திறக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதன் படி கொடி மர பிரதிஷ்டை மற்றும் பங்குனி மாதம் நடைபெற வேண்டிய ஆராட்டு திருவிழா ஆகிய நிகழ்வுகளுக்கு பின்னர் ஜூலை ஏழாம் தேதி இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.

14ம் தேதி மாலை ஐந்து மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதன் பின்னர் வேறு விசேஷ பூஜைகள் எதுவும் கிடையாது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். 15ம் தேதி அதிகாலை முதல் தினமும்  நெய்யபிஷகம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெறும். இரவு ஏழு மணிக்கு படிபூஜை நடைபெறும். கொடிமர பிரதிஷ்டைக்கு முன்னோடி பூஜைகள் 20ம் தேதி தொடங்கும். 24ம் தேதி வரை இந்த பூஜைகள் நடைபெறும். 25ம் தேதி காலை 11.50 முதல் பகல் 1.40 மணிக்கு இடைபட்ட முகூர்த்தில் தந்திரி கண்டரரு ராஜீவரரு மகா கொடிமர பிரதிஷ்டை நடத்துவார்.  28ம் தேதி நான்காம் கலசபூஜை நடைபெறும். அன்றைய தினமே 10 நாள் ஆராட்டு திருவிழாவுக்காக கொடியேற்று நடைபெறும். 29ம் தேதி முதல் ஜூலை ஆறாம் தேதி வரை தினமும் பகல் 12 மணிக்கு உற்சவபலி நடைபெறும். ஏழாம் தேதி பம்பையில் ஆராட்டு நடைபெறும். ஆராட்டு பவனி சன்னிதானம் வந்ததும் கொடி இறக்கப்பட்டு கோயில் நடை அடைக்கப்படும். மண்டல காலத்துக்கு அடுத்த படியாக மிக அதிக நாட்கள் தொடர்ச்சியாக சபரிமலை நடை திறப்பது மிகவும் அபூர்வமாக தற்போது நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !