உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித யாத்ரீகர்களுக்கு கூடுதல் வசதி பா.ஜ., எம்.பி., உறுதி

புனித யாத்ரீகர்களுக்கு கூடுதல் வசதி பா.ஜ., எம்.பி., உறுதி

மதுரை: வடமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் புனித யாத்ரீகர்களுக்கு வழிபாட்டு தலங்களில் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்படும், என ராஜ்யசபா பா.ஜ., எம்.பி., ரூபா கங்குலி கூறினார். மதுரை வாழ் வட மாநிலத்தவர்களிடையே பிரதமர் மோடியின் மூன்று ஆண்டு கால சாதனை விளக்க கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. மதுரை வாழ் வட இந்தியர்
நலச்சங்கத் தலைவர் ரகுராஜ் பந்தாரி வரவேற்றார். பா.ஜ., மாநில செயலாளர் ஹரிசிங், நிர்வாகிகள் சசிராமன், ஹரிஹரன், சிவபிரபாகரன் முன்னிலை வகித்தனர். தலைமை வகித்து ரூபா கங்குலி பேசியதாவது: பிரதமர் மோடியின் மூன்று ஆண்டு ஆட்சியில் நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பின் மூலம் ஏழை, நடுத்தர மக்கள் பயனடைவர். இதன் பலன் போகப்போக தெரியும். வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்வோர், ராமேஸ்வரம் - ராஜஸ்தான் இடையே நேரடி ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிஉள்ளனர். இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்திடம் பேசி விரைவில் தீர்வு காணப்படும். வட மாநிலங்களில் இருந்து மதுரை, ராமேஸ்வரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு புனித யாத்திரை மேற்கொள்வோருக்கு, வழிபாட்டு தலங்களில் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கவும், கூடுதல் ரயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். ராஜஸ்தான் சேவா சமிதி, குஜராத் சமாஜம், ராஜஸ்தான் வெல்பேர் அசோசியேஷன் நிர்வாகிகள், பா.ஜ.,
நிர்வாகிகள் சீனிவாசன், அற்புதராஜா, மீனாட்சி, சரவணக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !