கூழமந்தல் விநாயகருக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம்
ADDED :3077 days ago
உத்திரமேரூர்: உக்கம் பெரும்பாக்கம் நட்சத்திர கோவில் மண்டல பூஜையில், 108 வலம்புரி சங்காபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர் வந்தவாசி சாலையில், உக்கம் பெரும்பாக்கம் அருகே, கூழமந்தல் ஏரிக்கரையில் அசுவனி முதல் ரேவதி வரையிலான, 27 நட்சத்திர அதிதேவதைகளின் கோவில் உள்ளது. அங்கு, நட்சத்திரங்களுக்கான விருட்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலுக்கு, கடந்த ஏப்., மாதத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, மண்டல பூஜைகள் துவங்கி, அதன் பூர்த்தி விழா நேற்று நடந்தது. விழாவில், 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கு, ஒன்பது வகையான பொருட்களால் பரிகார அபிஷேகம் நடைபெற்றது. பின், விநாயகருக்கு, 18 வகையான பூஜை பொருட்களால், 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. இதில், அப்பகுதி பக்தர்கள் பங்கேற்று, தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொண்டனர்.