ஊத்துக்கோட்டை சிவன் கோவில்களில் பிரதோஷ விழா
ஊத்துக்கோட்டை : சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், சிவபெருமான், உலகை காக்க வேண்டி ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில், அன்னை பார்வதி மடியில் தலை வைத்து உறங்குவது போன்று உருவ ரூபத்தில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.சிவன் கோவில்களில், பிரதோஷ விழா கொண்டாட மூலக்காரணமான கோவில் இது என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, பிரதோஷ விழாவை ஒட்டி, வால்மிகீஸ்வரர் மற்றும் நந்திக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின், உற்சவர் அலங்கரிக்கப்பட்டு, கோவிலை மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர். இதேபோல், பெரும்பாலான சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடந்தது.