புனரமைப்பு பெறும் புதையுண்ட கோயில்
வேடசந்துார்: இவ்வூருக்கு வடக்கே குடகனாற்றின் மேற்கு கரையோரம் உள்ள கிராமம் கோட்டைமேடு. முன்பொரு காலத்தில் இப்பகுதி மன்னர்களின் கோட்டையாக இருந்திருக்கலாம் என்றும், அது மேடான பகுதியாகவும் உள்ளதால் கோட்டை மேடு என அழைக்கப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் இன்றும் செவிவழிச் செய்தியை தெரிவிக்கின்றனர். இந்த ஊருக்கு வடபுறம் ஆற்றங்கரையோரத்தில் மண்ணுக்குள் லிங்கம் ஒன்று தெரிவதாக 15 ஆண்டுகளுக்கு முன்பு மக்களிடையே தகவல் பரவியது. அப்பகுதியினர் மண்ணை தோண்டி பார்த்ததில் மிகப்பெரிய லிங்கம் ஒன்று கிடைத்தது. மேலும் துளாவியதில் நந்தி மற்றும் இரண்டு ஆள் உயர பூதக்கற்கள் கிடைத்தன.
இவற்றை அங்கேயே வைத்து சுத்தம் செய்து வணங்கி வந்தனர். பின் சிறிய அளவில் கொட்டகை அமைத்தனர். அது ஆஸ்பெஸ்டாஸ்’ கொட்டகையாக மாறி, இன்று கோயிலாக வளர்ந்துவிட்டது. சுற்றுப்பகுதி மக்கள் மற்றும் தனியார் மில் நிர்வாகத்தினர் இயன்ற உதவிகளை செய்வது மட்டுமின்றி, பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் விஷேச பூஜை நடத்தி அன்னதானம் மற்றும் பிரசாதமும் வழங்கி வருகின்றனர். திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இது குறித்து கோயில் பூஜாரி பெருமாள் கூறியதாவது: இந்த கோயில் யாரால், எந்த காலத்தில் கட்டப்பட்டது என ஒருவருக்குமே தெரியவில்லை. யார் கனவிலோ வந்து சொன்னதைத் தெரிந்து, ஊர் மக்கள் ஒன்றாகக்கூடி தோண்டி எடுத்து சிலைகளை வெளியே எடுத்து வணங்கி வருகிறோம். கோட்டைமேட்டில் உள்ள இந்த சுவாமிக்கு கோட்டை கோடீஸ்வரன்’ என பெயர் வைத்து தற்போது சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடக்கிறது, என்றார். இப்பகுதியில் ஒரு காலத்தில் பெரிய அளவிலான ஊர் இருந்திருக்கலாம். அது இப்பகுதி கோட்டையாகவும் விளங்கி இருக்கலாம். அதுவே காலப்போக்கில் கோட்டைமேடாக உருமாறி விட்டதாகத் தெரிகிறது. இப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினால் மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம் என்கின்றனர் முதியோர்கள்.