குருவின் சாபம் பெற்ற மன்னன்... பரிகாரமாக உருவானது கோயில்
அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயில் கலை, பண்பாடு, பாரம்பரியம் வழி வந்த கோயில் ஆகும். 12 ம் நுற்றாண்டை சேர்ந்த இந்த கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. அந்த காலத்தில், மன்னன் மாறவர்மன் சுந்தரபண்டியன் ராஜ மகா தேவி காந்திமதியுடன் மாளிகையில் உலாவி கொண்டிருந்தார். அப்போது அவரை பார்க்க, மணலுாரை சேர்ந்த அரசகுரு வந்திருந்தார். மாலை வேளையில் இருமாப்பு மற்றும் மயக்கத்துடன் இருந்த அரசன், குருவை வணங்காமல், மதிக்காமல் இருந்துள்ளான். இதனால் குரு திரும்பி சென்று விட்டார். குருவின் மனத் துயரம், மன்னனின் பாவமும் சேர்ந்து சாபமாக மாறி விட்டது. தவறை உணர்ந்த அரசன், குருவை அடிபணிந்து நின்று தொழுதான். சாபத்திற்கு பரிகாரம் கிடைத்தது.
ஞானிகள் உறையும் வில்வ வனத்தில் கோயில் கட்ட பணிக்கப்பட்டான். அருப்புக்கோட்டையின் கிழக்கு கோடியில் இருந்த வில்வ வனத்தை கண்டான் அரசன் . குரு சொன்ன இடம் இதுதான் என்று அறிந்து அங்கு சிவனுக்கு கோயில் கட்டி ஆனியில் வழிபாடு நடத்தினான். அதன் நினைவாக ஆனிமாதம் இக் கோயிலில் பிரமோற்சவம் நடக்க ஏற்பாடு செய்தான். அதுமுதல் ஆனி மாதம் 13 நாட்கள் பிரமோற்சவம் இந்த கோயிலில் மிக சிறப்பாக அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து கொண்டாடுகின்றனர். இக்கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை போன்று வடிவைக்கப்பட்டுள்ளது இதன் தனி சிறப்பு. மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக் கல்யாணம் போன்று ஆனி மாசத்தில் இங்கும் திருக்கல்யாணம் நடக்கும். சகல பாவங்களையும் தீர்க்கும் சூரியபுஸ்கரணி என்று அழைக்கப்படும் தெப்ப குளம் இங்குள்ளது. இந்த குளத்தில் குளித்து எழுந்தால் அனைத்து விதமான வியாதிகளும் தீர்ந்து விடும் என்பது ஐதீகம். இக்குளம் இங்கு அமைந்திருப்பதால் ஆகம விதிகளின்படி, நான்கு கால பூஜைகள் நடக்கிறது. ஆனி பிரமோற்சவ விழா தற்போது நடக்கிறது. கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விழா துவங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மண்டகப்படியார் நிகழ்ச்சி நடைபெறும். சுவாமி, அம்மன் விதவிதமான அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். பத்தாம் நாள் விழாவாக திருக்கல்யாணம், 11ம் நாள் விழாவாக தேரோட்டம் நடக்க உள்ளது.