கரந்தமலை கன்னிமார் தீர்த்தம்: வற்றியதால் பக்தர்கள் ஏமாற்றம்
நத்தம்: நத்தம் அருகே கரந்த மலை கன்னிமார் கோயில் தீர்த்தம் நீர்வரத்து இன்றி வற்றியதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். திண்டுக்கல்–நத்தம் ரோட்டில் உலுப்பகுடி பிரிவில் இருந்து 4 கி.மீ., தொலைவில் கரந்தமலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது கன்னிமார் கோயில். மலைப்பகுதியில் இருந்து ஓடை வழியாக வரும் தண்ணீர் கோயில் அருகே சிறு அருவியாக கொட்டும். ஆண்டு முழுவதும் இதில் நீர் வரத்து இருக்கும். கோடை காலத்திலும் சிறிதளவு நீராவது வந்து கொண்டு இருக்கும். ஆண்டு தோறும் பிரபலமான நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கிருந்து தீர்த்தம் எடுத்து செல்வது வழக்கம். இது தவிர மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் சுற்றுப்பகுதியில் நடக்கும் கும்பாபிஷேகம் உள்ளிட்ட விழாக்களுக்கும் பக்தர்கள் தீர்த்தம் எடுத்துச் செல்வர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய மழை இல்லததால் மலைப்பகுதி சிற்றோடைகளில் நீர் வரத்து நின்று போனது. சில மாதங்களாக கன்னிமார் தீர்த்தமும் வற்றியது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்பகுதியில் கோடை மழை பெய்தது. அருவிக்கு நீர்வரத்து ஏற்படும் வகையில் கூடுதல் மழை பெய்ய பெய்யுமா என்ற எதிர்பார்ப்புடன் பக்தர்கள் உள்ளனர்.