அழகு நாச்சியம்மன் கோவில் முளைப்பாலிகை ஊர்வலம்
திருப்பூர்: திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில் வழியில் உள்ள பெரிய அழகுநாச்சியம்மன் மற்றும் பொன்னழகி அம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம், நாளை நடக்கிறது. இதையொட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலிகை எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி, நேற்று மாலை நடந்தது. பெருமனை பிள்ளையார் கோவில் வளாகத்தில் இருந்து தீர்த்தக்குடங்கள், கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆர்.எம்., நகர் வெற்றிவேல் காவடிக்குழுவினரின் காவடியாட்டம், கேரள பூக் காவடி குழுவினர் காவடியாட்டம், செண்டை மேளம் முழங்க நடந்தது. குழந்தைகள் கண்ணன், ராதா உள்ளிட்ட வேடங்களில் சென்றனர். வள்ளிக்கும்மி நிகழ்ச்சியில் பெண்கள் பங்கேற்று, பாடல்கள் இசைத்து கும்மியாட்டம் நடத்தினர். திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, விநாய கர் வழிபாடு நடந்தன. காப்புக் கட்டும் நிகழ்ச்சியும், தீர்த்தக் கலசங்கள் யாக சாலை எழுந்தருளும் நிகழ்வும் நடந்தது. இன்று (4ம் தேதி) இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும்; கொங்குப் பெருஞ் சலங்கை ஆட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை, 5ம் தேதி காலை 9:00 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.