வரும் ஆடி மாதம் இரண்டு கிருத்திகை: பக்தர்கள் மகிழ்ச்சி
நடப்பாண்டில் ஆடி மாதம் இரண்டு கிருத்திகை வருகிறது. இதனால், சுப்ரமணிய சுவாமிக்கு காவடி எடுக்கும் பக்தர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். முருகர் கோவில்களில் மாதாந்திரம் கிருத்திகை உற்சவம் நடைபெறும். அதிலும் ஆடி மாதம் கிருத்திகை உற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். திரளான பக்தர்கள், பால், புஷ்பம், பன்னீர், மயில் காவடி என, பலவிதமான காவடிகளை சுமந்து வந்து சுவாமியை வழிபட்டு வருகின்றனர். ஆடி கிருத்திகை மட்டும் என்றில்லாமல், அந்த மாதம் முழுவதும் காவடி எடுத்து வந்து சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். ஆர்.கே.பேட்டை அடுத்த, நெல்லிக்குன்றம் மற்றும் கஜகிரி மலைக்கோவில்கள், அம்மையார்குப்பம், பொதட்டூர்பேட்டை, வங்கனுார் முருகர் கோவில்களில், காவடிகளை செலுத்துவதும் வழக்கத்தில் உள்ளது.
பிரசித்தி பெற்ற திருத்தணி மற்றும் வேலுார் மாவட்டம் ரத்தினகிரி மலைக்கோவில்களிலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்கின்றனர். ஆடி கிருத்திகையையொட்டி, சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. வரும் ஆடி மாதம் 3 மற்றும், 30ம் தேதி என, இரண்டு கிருத்திகை வருகிறது. இதனால், முருக பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும், திருத்தணி தேவஸ்தான காலண்டரில், ஆடி, 30ம் தேதி தான் ஆடி கிருத்திகை என, குறிப்பிடப்பட்டுள்ளது. ஆடி, 30ம் தேதி (ஆக.,15), சுதந்திர தினம் என்பதால், அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து ஏராளமான பக்தர்கள், திருத்தணிக்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.