உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரத்து 126 கி.மீ., பாதயாத்திரையில் ஆறுபடை வீட்டு கோயில்கள் தரிசனம்

ஆயிரத்து 126 கி.மீ., பாதயாத்திரையில் ஆறுபடை வீட்டு கோயில்கள் தரிசனம்

கொடைரோடு: ஆறுபடை வீட்டு கோயில்களின் தரிசனத்திற்காக, 70 வயதிற்கு மேற்பட்டவர்களைக் கொண்ட குழு, ஆயிரத்து 126 கிலோமீட்டர் பாதயாத்திரை துவங்கிஉள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வலைய பட்டியைச் சேர்ந்த ஆன்மிக குரு பச்சை காவடி, 76. இவரது தலைமையிலான குழுவினர், தொடர்ந்து பல முறை ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது உலக நலன், அமைதிக்காக முருகனின் ஆறுபடை வீட்டு தரிசன பாத யாத்திரையை நடத்தி வருகின்றனர். 11 மாதங்களுக்கு முன் முதன்முறையாக இந்த யாத்திரை மேற்கொண்டனர். தற்போது இரண்டாவது முறையாக ஜூன் 8-ல், பிள்ளையார்பட்டியில் இருந்து பாதயாத்திரை துவக்கினர். இதில் 70 வயதிற்கு மேற்பட்ட 16 பேர் உள்பட 21 நபர்கள் உள்ளனர். தினமும் குறைந்தது 7 மணிநேரம் நடக்கின்றனர். கொடைரோடு வந்த இக்குழுவின் தலைமை சாது பச்சைகாவடி கூறியதாவது: தொடர்ந்து 12 முறை ராமேஸ்வரத்தில் இருந்து காசி யாத்திரை நடத்தியுள்ளோம். தற்போது மழைவேண்டி 2வது முறையாக ஆறுபடை வீட்டு தரிசன யாத்திரை, ஆயிரத்து 126 கிலோமீட்டர் துாரம் நடக்க உள்ளோம்.  அதிகாலை 3 மணி துவங்கி, தினமும் 7 மணிநேரம் நடக்க வேண்டும். வழித்தடத்தில் உரிய நேரத்தில் உணவுக்கும், ஓய்விற்கும் நேரம் ஒதுக்கியுள்ளோம்.  வயது தடையின்றி அனைவரும் ஒரே உத்வேகத்துடன் நடக்கிறோம். பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமிமலை என 60 நாட்கள் பயண முடிவில், ஆகஸ்ட் 6ல் திருத்தணி கோயில் தரிசனத்துடன் இந்த யாத்திரை நிறைவடையும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !