உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் நரசிம்மர் குடைவரை கோவில் :புதுப்பிக்கும் பணி தீவிரம்!

நாமக்கல் நரசிம்மர் குடைவரை கோவில் :புதுப்பிக்கும் பணி தீவிரம்!

நாமக்கல் : நாமக்கல் நகரின் மையப் பகுதியில், மலைக்கோட்டையின் கீழ் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற குடைவரை கோவில்களான நரசிம்மர் மற்றும் ரங்கநாதர் சன்னிதிகளை, தொல்பொருள் ஆய்வுத் துறையின் மூலம், 15 லட்ச ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரு மாத காலத்துக்குள், பணி நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நாமக்கல் நகரின் மையப் பகுதியில், மலைக்கோட்டை அமைந்துள்ளது. அக்கோட்டையின் ஒரு பக்கம் பிரசித்தி பெற்ற நரசிம்மர் சன்னிதி, மற்றொரு பக்கம் ரங்கநாதர் சன்னிதியும் அமைந்துள்ளன. நரசிம்மர் சன்னிதி நேர் எதிரே, பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. நரசிம்மர் சன்னிதியின் நுழைவு வாயிலில், பிரமாண்ட கோபுரமும் உள்ளது. கி.பி., எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அதியேந்திரன் குணசீலன் என்ற அரசரால், இக்குடைவரை கோவில்கள் தோற்றுவிக்கப் பட்டதாக, சான்றுகள் தெரிவிக்கின்றன. இக்கோவில் சிற்பங்கள், பிற்காலத்தில் பல்லவ அரசர்களால் அழகு படுத்தப்பட்டதாகவும் சான்றுகள் தெரிவிக்கின்றன. பழமை வாய்ந்த கோவிலில், இந்து சமய அறநிலையத் துறையினர் பூஜை செய்து வருகின்றனர். கோவில் பராமரிப்பு உள்ளிட்டவற்றை தொல்பொருள் ஆய்வுத் துறையினர் மேற்கொள்கின்றனர். கோவிலில் உள்ள மடப்பள்ளி உள்ளிட்டவை சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டன. அவற்றை புதுப்பிக்கும்படி, தொல்பொருள் ஆய்வுத் துறையினரிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது. அதையடுத்து, நரசிம்மர், ரங்கநாதர் கோவில் புதுப்பிக்க, தொல்பொருள் ஆய்வுத் துறையினர், 15 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். இதுகுறித்து தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கூறியதாவது: நரசிம்மர் சன்னிதியையும், ரங்கநாதர் சன்னிதியையும், 15 லட்ச ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நரசிம்மர் சன்னிதியில், மடப்பள்ளி, நாமகிரித்தாயார் கோபுரம் புதுப்பிக்கப்படுகிறது. கோவிலின் பழமை மாறாமல், புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அதற்குரிய நீல நிற கற்கள், கிருஷ்ணகிரி, பெங்களூரில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !