இருமுடி எடுத்து செல்ல விமானத்தில் கெடுபிடி: கையில் வைத்துக் கொள்ள அனுமதி மறுப்பு!
விமானத்தில் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள், இருமுடியை எடுத்துச் செல்ல, தனியார் விமான நிறுவனம், சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், இதுவரை ஹேண்ட் பேக்கேஜில் வைத்து எடுத்துச் சென்ற இருமுடிகள், செக்இன் பேக்கேஜ் மூலம் கொண்டு செல்லப்பட்டன. கேரளாவிலுள்ள சபரிமலைக்கு ஆண்டு தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து சென்று வருகின்றனர். சபரிமலை யாத்திரையின் போது, இருமுடி எடுத்துச் செல்வது ஐதீகம். கனடா, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிப்போரும், இருமுடி தாங்கி விமானம் மூலம் கேரளாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கு சென்று, அங்கிருந்து சபரிமலை செல்கின்றனர். இவர்கள், விமான பயணத்தின் போது, தங்களுடனேயே இருமுடியை ஹேண்ட் பேக்கேஜாக வைத்துக் கொள்ள, இதுவரை எந்த தடையும் இருந்ததில்லை. இந்நிலையில், நேற்று காலை சென்னையிலிருந்து, கொச்சி புறப்பட்ட தனியார் விமானம் மூலம் கொச்சி சென்ற அய்யப்ப பக்தர்களின் இருமுடிகள், ஹேண்ட் பேக்கேஜாக கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் இருமுடியை செக்இன் பேக்கேஜாக எடுத்துச் சென்றனர்.இது குறித்து, விமானம் மூலம் சபரிமலை சென்றுள்ள சந்தானம் என்ற பக்தரை போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "பாதுகாப்பு காரணங்களுக்காக, இருமுடியை ஹேண்ட் பேக்கேஜாக எடுத்துச் செல்ல கூடாது; செக்இன் பேக்கேஜில் வைத்து எடுத்துச் செல்லுங்கள் என்று, விமான நிறுவன ஊழியர்கள் கூறினர். இதையடுத்து, எங்களின் இருமுடிகளை ஒரே பேக்கில் வைத்து, செக்இன் பேக்கேஜாக எடுத்து வந்தோம், என்றார். இருமுடியை எடுத்துச் செல்வதற்கு என்ன வரைமுறை என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளை கேட்டபோது, "விமானத்தில் ஏற்றப்படும் எந்த பொருளும், இரண்டடுக்கு ஸ்கேனிங்கிற்கு பின், அனுமதிக்கப்படுகின்றன. இந்த வகையில், இருமுடியும் ஸ்கேனிங் செய்யப்பட்டு, பக்தர்களிடம் திருப்பி தரப்படுகிறது. இதை தவிர இருமுடி எடுத்துச் செல்ல எந்த விதிமுறைகளும் புதிதாக விதிக்கப்படவில்லை, என்றனர்.