உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்காலில் கோவிலை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு!

காரைக்காலில் கோவிலை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு!

காரைக்கால் : காரைக்காலில் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். காரைக்கால் மாவட்டத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வழிப்பாட்டு தலங்களை இடிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக 11 கோவில்கள் இடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டு கோவில்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெரியபேட் பகுதியில் உள்ள ராஜராஜேஸ்வரி சீதளாதேவி கோவிலும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ராஜராஜேஸ்வரி சீதளாதேவி கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தும், திருநகர், கல்லறைப்பேட், பெரியபேட், முல்லைநகர், சுனாமி குடியிருப்பு, மேட்டு தெரு மற்றும் சேத்திலால் நகர் பகுதியில் வாழும் தலித் மக்களுக்காக பை பாஸ் சாலையோரமாக உள்ள சுடுகாட்டிற்கு அருகில் நகராட்சி இடத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட கருமாதி மண்டபம் மின்சார வசதி, தண்ணீர் வசதி, சுற்றுச் சுவர் கட்ட கடந்த பிப்ரவரி மாதம் 4.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் நகராட்சி பணிகளை மேற்கொள்ளாமல், கருமாதி கொட்டகை நிலத்தை அரசியல் பிரமுகர் ஆக்கிரமிக்க துணை போவதாகவும், உடனடியாக பணிகளைத் துவங்க வேண்டும் என வலியுறுத்தியும் பெரியபேட், கல்லறைபேட், சேத்திலால்நகர், திருநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சப்-கலெக்டரை சந்திக்க ஏற்பாடு செய்தனர். அப்போது, சப்-கலெக்டர் சந்திரசேகரனிடம் கிராம மக்கள் கோவில் இடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கருமாதி கொட்டகைக்கு மின்சார வசதி, குடிநீர், சுற்றுச்சுவர் கட்டவேண்டும் என இரண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !