மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி கூத்தாட்டுக்குளம் கோயிலில் ஆரம்பம்
கோட்டயம் : கேரளா எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுக்குளம் பகவதி கோயிலில், ஒரு மாதம் நடக்கும் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.இக்கோயில் எர்ணாகுளத்தில் இருந்து 48 கி.மீ., கோட்டயத்தில் இருந்து 39 கி.மீ.,ல் கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டு மனாவில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தில் பக்தர்களுக்கு, அம்மனின் பிரசாதமாக, நோய் தீர்க்கும் மருந்து வழங்கப்படுகிறது.ஆக.,16 வரை தினமும் காலை 6:30 முதல் காலை 11:30 வரை மருந்து பிரசாதம் வழங்கப்படும். ஆடி மாத முதல் தேதியான நேற்று, இதற்கான துவக்க நிகழ்ச்சி நடந்தது. ஹோமங்கள், கஜபூஜை நடந்தது. கோயில் வளாகத்தில் 20 யானைகளுக்கு பக்தர்கள் உணவு ஊட்டினர்.கோயில் தலைவர் என்.பி.நாராயணன் நம்பூதிரி, ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் என்.பி.பி.நம்பூதிரி, தமிழக பக்தர்கள் கலந்து கொண்டனர்.இங்கு, மருத்துவ கடவுள் எனப்படும் தன்வந்திரிக்கு தனிக்கோயில் உள்ளது. தினமும், காலை 6:30 முதல் 9:30 வரை தன்வந்திரி ஹோமமும், மாலை 6:00 முதல் இரவு 7:30 வரை நோய்தீர்க்கும் பூஜையும் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு, 94460 35100 ல் தொடர்பு கொள்ளலாம்.