உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ’சிரித்து வாழ வேண்டும்; பிறர் சிரிக்க வாழக்கூடாது’: அகில இந்திய சத்யசாய் சேவா தலைவர் அறிவுரை

’சிரித்து வாழ வேண்டும்; பிறர் சிரிக்க வாழக்கூடாது’: அகில இந்திய சத்யசாய் சேவா தலைவர் அறிவுரை

ஈரோடு: ”சிரித்து வாழ வேண்டும்; பிறர் சிரிக்க வாழக்கூடாது,” என்று, அகில இந்திய, சத்ய சாய் சேவா நிறுவன தலைவர் நிமிஷ் பாண்டியா, அறிவுரை வழங்கினார்.

நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, ஸ்ரீசத்யசாய் சேவா நிறுவன, அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்டியா, நேற்று ஈரோடு வந்தார். சத்ய சாய் சமிதி மையங்கள், அதன் சார்பில் நடக்கும் பள்ளிகள், ஊரக தொழில் பயிற்சி மையம், சேவை திட்டங்களை ஆய்வு செய்தார். பின், திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் நடந்த, மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: சத்ய சாய் நிறுவனம், ஆன்மீக நிறுவனம். இது மற்ற தொண்டு நிறுவனங்களில் இருந்து வேறுபட்டது. மற்றவை உலகை மாற்ற வேண்டும் என்று, கருதுகின்றன. நம் நிறுவனம், நம்மை நாமே மாற்றிக் கொள்ள செயல்படுகிறது. நாம் மாறினால் தான் உலகம் மாறும். நாம் இந்த உலகத்தை பயம் கொண்டதாக மாற்றி இருக்கிறோம். இன்று உலகில் பலர், பொருட்களை முக்கியமாக பார்க்கின்றனர். நாம் பயன்படுத்துவதால்தான், பொருட்களுக்கு மதிப்பு உயர்கிறது. இந்த புரிதலை உருவாக்கவே பகவான் அவதரித்தார். இறைவனை மற்ற இடங்களில் தேடுவதை விட்டு, உள்ளத்துக்குள் தேட வேண்டும். அதை உணர்வதற்கான இடமே சாய்சமிதிகள், கோவில்களாகும். இறைவன் புகைப்படத்தில், வீடியோவில், ஓவியத்தில் இல்லை, மனித நேயத்தில் உள்ளார். அதை நாம் பிறருக்கு செய்யும், சேவைகள் மூலமாகத்தான் உணர முடியும். நான் தேசம் முழுவதும், சுற்றுப்பயணம் செய்து சாய் சமிதிகள் செயல்பாடுகளை ஆய்வு செய்கிறேன். அதேபோல் மாநில, மாவட்ட, சமிதி தலைவர்கள் சுற்றுப்பயணம் போக வேண்டும். அதே சமயம் வீட்டில் அன்பு, அமைதி வேண்டும். வீட்டில் அமைதி, அன்பின்றி சத்யசாய் சமிதி நடத்தும், பஜனைகளில் பங்கேற்பதில் பயனில்லை. வீட்டில் அமைதியை தொலைத்து விட்டு, பிறர் சிரிக்க வாழக் கூடாது. வீடு மேம்பட்டால் நாடு, உலகம் மேம்படும். பெற்றோர், மனைவி, குழந்தைகள், மீது அன்பு செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் வரதன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !