உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 435வது திருவிழா துவங்கியது

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 435வது திருவிழா துவங்கியது

தூத்துக்குடி : தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி கடற்கரையையொட்டி அமைந்துள்ள தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் நடக்கும் திருவிழா தென்மாநிலங்கள் மற்றும் கீழ்திசை நாடுகளில் பிரசித்தி பெற்றதாகும். நேற்று காலை ஆலயத்தில் சிறப்பு திருப்பலியுடன் கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கொடி ஆலய வளாகத்தை சுற்றி கொண்டு வரப்பட்டது. பின்னர் காலை 8.55 மணிக்கு ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் கொடியை ஏற்றி வைத்தார். உலக சமாதானத்தை வலியுறுத்தி புறாக்கள் பறக்கவிடப்பட்டன. அப்போது பழைய துறைமுகத்தில் இழுவை கப்பலிலிருந்து சங்கு ஒலி எழுப்பப்பட்டது. பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக கொண்டு வந்திருந்த பழம், பால் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினர். பகல் 12 மணிக்கு பனிமயமாதா அன்னைக்கு பொன் மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. வரும் 30 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை புது நன்மை விழா நற்கருணை பவனி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பனிமயமாதாவின் திரு உருவ பவனி ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !