உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ‘ராமாயணம் கேட்டால் தர்ம சிந்தனை ஓங்கும்’

‘ராமாயணம் கேட்டால் தர்ம சிந்தனை ஓங்கும்’

திருப்பூர் : திருப்பூர், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில், வால்மீகி ராமாயண தொடர் சொற்பொழிவு, 10 நாட்கள் நடந்தது. இதனை, மதுரை அழகர்கோவில் ஸ்ரீகோமடம் சுவாமி நடத்தினார். நிறைவு நாளில், ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் குறித்து, ஸ்ரீகோமடம் சுவாமி பேசியதாவது: இலங்கையில் ராவண வதத்தை முடித்த ராமர், அசோக வனத்தில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்டு, புஷ்பக விமானத்திலே அயோத்தி நோக்கி தன் பயணத்தை துவங்கினார். இலங்கையிலிருந்து புறப்பட்ட புஷ்பக விமானத்தில் பயணித்த ராமன், சீதையிடம் தான் வானர சேனைகளுடன் எழுப்பிய சேதுபாலத்தைக் காட்டினார். ராமேஸ்வரத்தில் இறைவனை வணங்கி, அக்னி தீர்த்தம் நீராடல் மற்றும் பித்ரு தர்ப்பணம் செய்தால், ஏற்படும் நன்மை குறித்து விளக்கினார்.

திருவேங்கடம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் சுட்டி காட்டி அதன் சிறப்புகளை விவரித்தார். புஷ்பக விமானத்தில் ராமர், சீதையுடன் லட்சுமணன், விலங்கினமான அனுமன், ராட்சஷ இனத்தை சேர்ந்த விபீஷணன், சாதாரண குடிமகனான குகன், வேடர் குலத்தவர் என பல இனத்தாரையும் அழைத்துச் சென்ற புஷ்பக விமானம், பரத்வாஜ முனிவர் வசிப்பிடம் சேர்ந்தது. தனது இலங்கைப் பயண வெற்றியை அவருடன் பகிர்ந்தும், ராமனுடன் வந்த அனைவரையும் பரத்வாஜா முனிவர் பசியாறச் செய்தார். அப்போது அமர இடமின்றி தடுமாறிய அனுமனை ராமன் தன் இலையில் எதிரே அமர்ந்து உணவருந்த செய்தார். புஷ்பக விமானம் அயோத்தி சென்றடைந்தது. ராமன் உள்ளிட்டோரை வரவேற்ற பரதன், சத்ருகன் மற்றும் நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். சரயு நதியில் அனைவரையும் நீராட வைத்து, புத்தாடையும், ஆபரணங்களும் அணிவித்து, அயோத்தி அரண்மனைக்கு அழைத்துச் சென்று பட்டாபிஷேகம் நடந்தது.

இந்த நிகழ்வுகளின் போது, அங்கிருந்த அத்தனை கதாபாத்திரங்களின் <உணர்வுகளையும் வால்மீகி தனது எழுத்தில் பிரதிபலிக்கிறார். 17 லட்சம் ஆண்டு முன் நடந்த ராமாயணத்தை இன்றும் நாம் கேட்டும், கூறியும் மகிழ்கிறோம். ராமாயணம் கேட்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பெருமாளே கூறியுள்ளார். இதன் மூலம் தர்ம சிந்தனை ஓங்கும்; புகழ்பெருகும்; நீண்ட ஆயுள் பெறலாம். வாரிசுகள், உறவுகள் அனுகூலம் பெறலாம்; குடும்பம் செழிக்கும். நல்லறிவு உருவாகும். வைகுண்ட பிராப்தி பெறலாம். இவ்வாறு அவர் பேசினார். சொற்பொழிவில், பங்கேற்ற அனைவருக்கும் ஸ்ரீராமர் பட்டாபிஷேக பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !