வடமதுரையில் சாட்டையடி பெற்று நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்
ADDED :3098 days ago
வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி பெற்றும் வினோதமாக நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வடமதுரை அருகே கொல்லப்பட்டி கிராமம் ஜி.குரும்பபட்டியில் மகாலட்சுமியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடிப்பெருக்கை முன்னிட்டு 3 நாள் திருவிழா துவங்கியது.
கோயில் முன்பாக விரதமிருந்த பெண்கள் உள்பட 40 பக்தர்கள் அமர்ந்தனர். பூசாரி பழனிச்சாமி வழக்கமான பாரம்பரிய வழிபாடுகளை முடித்து நேர்த்திக்கடன் வழிபாட்டுக்காக அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில் தேங்காயை உடைத்தார். பின்னர் சேர்வைகாரர்களிடம் பக்தர்கள் ஒவ்வொரு சாட்டையடி பெற்று கோயிலுக்குள் சென்று வழிபட்டனர். இந்த வினோத வழிபாட்டை காண ஏராளமான கிராம மக்கள் திரண்டிருந்தனர். ஏற்பாடுகளை வெள்ளவரிசை முருகேசன், ஊர்கவுண்டர் காளிமுத்து உள்பட பலர் செய்திருந்தனர்.