நிலக்கோட்டை உலா வரும் வாகனங்கள்
நிலக்கோட்டை: உருவ வழிபாட்டுக்கு பிரசித்தி பெற்ற தமிழகத்தில் சுவாமி சிலைகளின் அழகில் மயங்காதோர் இல்லை. பிரதிஷ்டை செய்தவை, சுயம்பு சிலைகளின் அழகைக் கண்டால் நமக்கு பிரமிப்புதான் ஏற்படும்.
கோயில் தெய்வங்கள் பக்தர்களுக்கு ஆசிவழங்கி பரவசப்படுத்த வீதியுலா செல்கின்றன. அதற்கு உதவும் வாகனங்கள் ரெம்பவே ஆச்சாரமிக்கவை. ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்தனி சிறப்பு உண்டு. சிம்மம், குதிரை, கருடன், மயில், அன்னம் இப்படி தெய்வங்கள் தங்களுக்கேற்ற வாகனங்களில் உலாவருவர்.
இந்த வாகனங்கள் எல்லாம் நிலக்கோட்டையில் தயாராகி வருகின்றன என்பது உங்களில் பலருக்குத் தெரியாதுதான். இங்கு சிலைகளின் அழகுக்கு, அழகு சேர்க்க தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட கவசங்கள், வீதி உலா வரும் உற்சவர், அவரை தாங்கி வரும் வாகனங்கள், திருவாச்சி, கொடிமரம், பூஜை சாமான்கள் எனத் தயாராகும் கோயில் உபகரணங்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
மூன்று தலைமுறையாக இதனை தெய்வீகப் பணியாக கருதி தயாரித்து வருகிறார், நிலக்கோட்டை செந்தில்குமார். அவர் கூறியதாவது: கவசம், சிலைகளை வேறு வேறு முறைகளில் செய்தாலும், மூலப்பொருள் ஒன்றுதான். செம்பு, பித்தளை, தாமிரம் ஆகியவற்றால் கவசம், சிலை உருவாகிறது. தாமிரத்தில் வடிவமைத்த சிலைகளுக்கு வெள்ளி, தங்க முலாம் பூசுவதால் நம் கண்களுக்கு விருந்தாகிறது.
அரை அடியில் இருந்து 10 அடி வரை கவசங்களுக்கு ஆர்டர் கிடைக்கும். சிம்ம வாகனம் உருவாக்கி சில நாட்களுக்கு முன்பு கோயிலுக்கு வழங்கினோம். நம்முடைய கற்பனையில் உருவாவது தான் வாகனங்கள்.
நேர்மறை சிந்தனையோடு உருவாக்கினால் வாகனங்களுக்கும் அழகு கூடும். தெய்வமே அழகுதான். அந்த தெய்வமும் வாகனத்தில் அமர்ந்து வீதியுலா வருவது அழகோ அழகுதான், என்றார். இவரிடம் 88839- 38882ல் பேசலாம்.