கானியம்மன் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியில், கானியம்மன் கோவில் தேரோட்டம், நேற்று வெகு விமர்சையாக நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியில் கானியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலின் தேர்த்திருவிழா, கடந்த, 15ல், பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, 17ல், கொடியேற்றுதல், 21ல், சுவாமி திருக்கல்யாணம், 22ல், வாண வேடிக்கை, பல்லக்கு உற்சவம், மாவிளக்கு எடுத்தல், சிறப்பு பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று வெகு விமர்சையாக நடந்தது. பக்தர்கள் கானியம்மன் தேரை வடம் பிடித்து இழுத்து, கோவிலைச் சுற்றி வந்து நிலை நிறுத்தினர். தேரின் மீது உப்பு, மிளகு, முத்துக்கொட்டை மற்றும் நவதானியங்களை தூவி, பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று முதல் வரும், 27 வரை புதுப்பட்டி மற்றும் பாப்பம்பாடியில் தேர்கடை திருவிழாவும், எருது விடுதல், முனி பிடிக்கும் நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். கானியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அரூர் கிளை சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், சேலத்தில் இருந்து ஏ.பள்ளிப்பட்டி, கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை வழியாக, வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. அரூர் டி.எஸ்.பி., செல்லப்பாண்டியன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை, ஏ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, பாப்பம்பாடி ஆகிய, ஆறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.