திருப்பரங்குன்றம் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன் நகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவர் கற்பக விநாயகர் சன்னதியில், உற்சவர் விநாயகர் விக்ரகம் மற்றும் கிராமத்தினர் சார்பில் கொடுக்கப்பட்ட களிமண் பிள்ளையார் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. கோயில் மண்டபங்களில் எழுந்தருளியுள்ள விநாயகர்களுக்கு கொழுக்கட்டை படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.
திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் ஆக. 21முதல் நடந்த லட்சார்ச்சனை, யாகசாலை பூஜைகள் நேற்று பூர்த்தி செய்யப்பட்டு, மூலவர், உற்சவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. மகா கணபதி ஹோமத்தை தொடர்ந்து மாலையில் மூஷிக வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார். பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் கணபதி ஹோமம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள் முடிந்து மாலையில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. திருநகர் மருதுபாண்டியர் தெருவிலுள்ள ஆனந்த விநாயகர் கோயிலில் இரண்டு நாட்களாக நடந்த சிறப்பு பூஜைகள் முடிந்து சுவாமிக்கு ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திருநகர் சுந்தர் நகர் வெற்றி விநாயகர் கோயிலில் சிறப்பு பூகைள் முடிந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருப்பரங்குன்றம் பாலாஜிநகர் சர்வ சித்தி விநாயகர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திருநகர் மகாலட்சுமி காலனி வரசித்தி விநாயகர் கோயிலில் மூலவருக்க சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது.
வாடிப்பட்டி: வாடிப்பட்டி வல்லப கணபதி கோயிலில் ஆவணி மாத விநாயகர் சதுர்த்திவிழா நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை 5.00 மணிக்கு 108 சங்காபிஷேகமும், தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அலங்காரமும், சாதுக்களுக்கு வஸ்திர மற்றும் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழுவினர் மற்றும் கிராமபொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோல் நீரேத்தான் இரட்டைவிநாயகர் கோயிலில் குலசேகரன்கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள வன்னிமரத்தடிவிநாயகர், முக்குருணிவிநாயகர், ராஜகணபதி மற்றும் குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் அக்னிதீர்த்த விநாயகர் மேட்டுப்பெருமாள்நகர் அய்யப்பன்கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் உள்ள விநாயகருக்கு சிறப்புபூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.