ஆரோக்கிய அன்னை சிற்றாலய கொடியேற்று விழா கோலாகலம்
சேலம்: சேலம், சாமிநாதபுரம், ஆரோக்கிய அன்னை சிற்றாலயத்தின், 34வது பெருவிழா, நேற்று மாலை, 6:30 மணிக்கு தொடங்கியது. சேலம் மறைமாவட்ட பொருளாளர் எட்வர்ட்ராஜன் தலைமையில், ஏசுநாதர் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை, கிறிஸ்தவர்கள் அணிவகுத்து, ஊர்வலம் சென்றனர். ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, மாணிக்கம் செட்டி தெரு, சாமிநாதபுரம் பிரதான சாலை, அல்ராஜ் தெரு வழியாக வந்த ஊர்வலம், மீண்டும் ஆலயத்தை அடைந்தது. திருப்பலி பாடல்கள் பாடி, கிறிஸ்தவர்கள் மலர் தூவ, கொடியேற்று விழா, கோலாகலமாக நடந்தது. குழந்தையேசு பேராலய பங்குதந்தை கிரகோரிராஜன் கொடியேற்றி வைத்து, திருப்பலி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, செப்., 7 வரை, தினமும் மாலை, 6:30 மணிக்கு, நவநாள் திருப்பலி மறையுரை நிகழ்ச்சி நடக்கிறது. விழா முத்தாய்ப்பாக, 8ல், கூட்டு திருப்பலியுடன் தேரோட்டம் நடக்கிறது. தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் கலந்து கொண்டு ஆசி வழங்குகிறார்.