உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் புதிய அன்னதான மண்டபம்!

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் புதிய அன்னதான மண்டபம்!

ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் புதிய மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக அதிகளவு வந்து செல்கின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் தமிழக அரசின் அன்னதான திட்டம் பல ஆண்டுகளாக பக்தர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நன்கொடையாளர்கள் மூலமும், நன்கொடையாளர்கள் இல்லாத நேரத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு பக்தர்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. அமாவாசை உட்பட கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கும் நாட்களில் அன்னதான மண்டபத்தில் அதிகளவு கூட்டம் சேர்வதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது. இதற்கு தீர்வு காண இந்து அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தில் புதிதாக அன்னதான மண்டபம் கட்டும் பணி தற்போது நடந்துவருகிறது.

கோவில் உதவி ஆணையர் ரமேஷ் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் அன்னதானத்திற்காக காத்திருப்பதை தவிர்க்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய அன்னதான மண்டப கட்டுமான பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் நிலையில் அதிகளவு பக்தர்கள் ஒரே நேரத்தில் உணவருந்த முடியும். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !