ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி
ADDED :2944 days ago
ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதை முன்னிட்டு கிருஷ்ணர், ருக்மணி, சத்யபாமா உற்சவர்கள் கிருஷ்ணன்கோயிலுக்கு எழுந்தருளினர். அங்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து ஆண்டாள் கோயிலுக்கு திரும்பினர். அங்கு வேதபிரான் சுதர்சன்பட்டர் ஸ்ரீஜெயந்தி புராணம் வாசித்தார். வடபத்ரசயனர் சன்னிதியில் வேதபிரான் அனந்தராமபட்டர் புராணம் வாசித்தார். இரவு சந்திரோதயத்தில் கிருஷ்ணர் பிறப்பை முன்னிட்டு பெரியாழ்வார் திருவாய்மொழி சேவாகாலம் நடந்தது. இன்றிரவு 8:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள், கண்ணன் வீதியுலா நடக்கிறது. இதையடுத்து உறியடி உற்சவம், வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜா செய்துள்ளனர்.