உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழாவுக்கு கொலு பொம்மை தயாரிக்கும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழாவுக்கு கொலு பொம்மை தயாரிக்கும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி: நவராத்திரி விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில், கொலு பொம்மைகள்
தயாரிக்கும் பணி வேகமக நடந்து வருகிறது.

நவராத்திரியில், வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து, ஒன்பது நாட்களும் பூஜை
செய்வது வழக்கம். இந்தாண்டு நவராத்திரி விழா, வரும், 21ல் துவங்குகிறது.  இதையொட்டி, கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள திருநீலகண்டர் தெருவில், கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி, கடந்த, இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. இதில், குபேர லட்சுமி செட், இந்திரன் சபா செட், லட்சுமி பூஜை, திருமண ஊர்வலம், யானை கிரிக்கெட், சோட்டாபீம், கார்த்திகை பெண்கள் மற்றும் ஜல்லிக்கட்டு செட் போன்ற, 30க்கும் மேற்பட்ட கொலு பொம்மை செட்களை தயாரித்து வருகின்றனர். முற்றிலும் களிமண்ணால் தயாரிக்கப்படும், நான்கு பொம்மைகள் கொண்ட, ஒரு செட், 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 30 பொம்மைகள் கொண்ட ஒரு செட், 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து வரும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து, கடந்த, 40 ஆண்டுகளாக பொம்மை தயாரித்து வரும் கந்தன் கூறியதாவது:
கிருஷ்ணகிரியில், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கொலு பொம்மைகளை தயார் செய்து வந்தனர். தற்போது, மூன்று குடும்பத்தினர் மட்டுமே தயாரித்து வருகிறோம். தமிழகத்தில், பாரம்பரியம் மிக்க வயதானவர்கள் உள்ள வீடுகளில் மட்டுமே கொலு வைக்கின்றனர். மற்றவர்கள், கொலு வைக்க அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், பெங்களூருவில் கொலு பொம்மை வைத்து கொண்டாடுவதை விரும்பி செய்கின்றனர். தற்போது களிமண் எடுப்பதில் சிக்கல் உள்ளதாலும், பெயின்ட் விலை அதிகரிப்பு மற்றும் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால், கொலு பொம்மைகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !