உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு பவானியில் 20ல் மஹா புஷ்கர விழா தொடக்கம்: தீயணைப்பு துறை தயார்; காவல்துறை யோசனை

ஈரோடு பவானியில் 20ல் மஹா புஷ்கர விழா தொடக்கம்: தீயணைப்பு துறை தயார்; காவல்துறை யோசனை

ஈரோடு: பவானியில், காவிரி மஹா புஷ்கர விழா பணிக்கு, தீயணைப்பு துறையினர்,
தயாராகியுள்ள நிலையில், காவல்துறையில் இன்னும் முடிவாகவில்லை. பவானி கூடு துறையில் வரும், 20ல் துவங்கி, 24 வரை, மஹா புஷ்கர விழா நடக்கிறது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மக்கள் இந்த நாட்களில் காவிரியில் நீராடுவர்.
இதற்கான மீட்பு பணிகளை, தயார் நிலையில் வைத்திருக்க தீயணைப்பு துறையினருக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணன் கூறியதாவது: ஈரோடு, பவானியில்
இரு ரப்பர் படகுகள் உள்ளன. இவை புஷ்கர நாட்களில் பயன்படுத்தப்படும். பல்வேறு நிலையில் உள்ள தீயணைப்பு வீரர்கள், 100 பேர் பணிக்கு தயார் நிலையில் இருப்பர்.
ஈரோடு, கொடுமுடி பகுதிகளில், விழா நடப்பது குறித்து, தகவல் ஏதுமில்லை.

காவல் துறையில் இதுவரை முடிவில்லை: பவானியில், மஹா புஷ்கர பாதுகாப்பில் ஈடுபடும், போலீசார் எண்ணிக்கை குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பவானி சப்-டிவிஷனில் உள்ள, 200 போலீசார் பணியில் ஈடுபடுத் தப்படுவர். கூட்ட நெரிசலை பொறுத்து எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். முதல் நாளில், 10 ஆயிரம் முதல், 20 ஆயிரம் பக்தர்கள் வரலாம்.

பவானியில் ஒரே சமயத்தில், 5,000 பேர் நீராட முடியும். இதனால் நெரிசல் ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆரத்தி நிகழ்ச்சியில் அதிகபட்சம், 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க முடியும். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக வரும் பக்தர்கள் மட்டுமே, இதற்கு அனுமதிக்கப்படுவர். கடைசி மூன்று நாட்களில், ஒரு லட்சம் வரை பக்தர்கள் வந்து செல்ல வாய்ப்புள்ளது. ஒரே நேரத்தில் குவியாமல், அவ்வப்போது வந்து செல்வார்கள்  என்பதால், நெரிசல் ஏற்பட வாய்ப்பிருக்காது என்றே கருதுகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !