விழுப்புரம் செல்வமுத்து மாரியம்மன் கோவிலை மாற்று இடத்தில் கட்டுவதற்கு சிக்கல் இந்து சமய அறநிலைய துறை முட்டுக்கட்டை
விழுப்புரத்தில் மாற்று இடத்தில் கட்டப்பட்டு வரும் செல்வமுத்து மாரியம்மன் கோவில்
கட்டுமான பணியை, மேற்கொள்வதில் திடீரென சிக்கல் உருவானது. இந்து சமயஅறநிலைய துறை அதிகாரிகள், ஆட்சேபனை தெரிவிப்பதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் இருந்து திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், காட்பாடி ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்கும் பணி, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்துவங்கியது.
இந்த பணியை யொட்டி, சர்வீஸ் சாலைக்காக, சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள இடங்களை கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் வடக்குத்தெரு சந்திப்பில், அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த செல்வமுத்துமாரியம்மன் கோவில் அகற்றப்பட உள்ளது.
இதற்காக அறநிலையத் துறை அனுமதி பெற்று, பொதுமக்கள் ஒத்துழைப்போடு, கோவில்
இடம் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கான மாற்று இடமாக, மாவட்ட நிர்வாகம் மூலம், காட்பாடி ரயில்வே கேட் அருகே உள்ள குட்டை புறம்போக்கு பகுதி
ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இங்கு கோவில் கட்டுவதற்காக கடந்த ஜூலை 27 ம் தேதி, இந்து அறநிலையத்துறை அலுவலகம் மூலம் வரைபடம் தயாரித்து, அதன்படி, கோவில் கட்டும் பணிகள் தீவிரமாக
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அறநிலைய துறை ஆய்வாளர் சரவ ணன் அளித்த புகாரின் பேரில், மின்துறை ஊழியர்கள் புதியதாக கட்டப்படும் கோவிலின் மின் இணைப்பை துண்டித் துவிட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகிகள்,ஆய்வாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்து அறநிலைய துறை மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்று இடத்திற்கு, ஒப்புதல் கடிதம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கோவில் கட்டுவது விதிமுறைகள் மீறிய செயல் என தெரிவித்துள்ளார்.
இப்பிரச்னை குறித்து இந்து அறநிலைய துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது :
செல்வமுத்து மாரியம் மன் கோவிலுக்கு மாற்று இடமாக, இந்து அறநிலைய துறை மூலம், காட்பாடி ரயில்வேகேட் அருகே தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில், வழிபாதை இருப்பதால், கட்டடம் கட்டுதல் கூடாதென, அப்பகுதியைச் சேர்ந்த சிலர், மாவட்ட உரிமை யியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தபிரச்னைகளுக்காக அறநிலைய துறை, மாற்று இடத்திற்கு அனுமதி வழங்க பரிசீலனை செய்து கொண்டிருந்த தருணத்தில், கோவில் கட்டும் பணியை துவக்கி உள்ளனர். இது அறநிலைய துறையின் விதிமுறையை மீறிய நடவடிக்கை என தெரிவித்துள்ளனர்.
கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், கடந்த 40 ஆண்டு காலமாகபழமை வாய்ந்த, இந்த கோவிலை பரம்பரை அறங்காவலராக மோகன் மற்றும் அவரது குடும்பத்தார் நிர்வகித்து வந்தனர். கடந்த 2014ம் ஆண்டு இந்து அறநிலைய துறை கட்டுபாட்டிற்குள், இந்த கோவில் சென்றாலும், பொதுமக்களின் பங்களிப்போடும்,பக்தர்களின் ஆதரவோடும் கோவில் இயங்கி வருகிறது.
இந்த கோவிலை முழுமையாக இடிப்பதற்குள், மாற்று இடமாக அரசு அனுமதி பெற்று வழங்கிய இடத்தில், கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் நிதியுதவியுடன்,
கோவிலை கட்ட முயற்சி செய்து வருகிறோம்,
இதற்காக இந்து அறநிலைய துறை மூலம் கோவில் கட்ட 12 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
செய்துள்ளனர். இந்த பணத்தை கூட பொருட்படுத்தாமல், பொதுமக்களின் பங்களிப்புடன்
கோவில் கட்டுமான பணியை துவக்கி உள்ளோம். இந்நிலையில், கோவில் கட்டட பணியை நிறுத்துமாறு, இந்து அறநிலைய துறையினர் திடீரென ஆட்சேபணை தெரிவிப்பது, ஆச்சரியமாக உள்ளது என தெரிவித்தனர்.
இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் இடையே
ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து, பிரச்னைக்கு சுமூக தீர்வு ஏற்படுத்த
மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.