கொங்கணகிரி கோவில் திருப்பணி தீவிரம்
திருப்பூர்: திருப்பூர் கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது; ஆறு மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் காலேஜ் ரோட்டில், பழமையான கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் உள்ளது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமான இக்கோவில் மலை மீது, பாலை மரங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் துவங்கின; ராஜகோபுரம் பணி, 23 ஆண்டுகளாக இழுபறியாகி வந்த நிலையில், திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை துவக்கப்பட்டு, கோவில் திருப்பணிகள் துவங்கின.
பாதியில் நின்ற ராஜகோபுரம், 21 அடி உயரம், நிலை தளத்துடன், 67 அடி உயரத்தில், ஐந்து நிலைகளுடன் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. ராஜகோபுரம் கட்டுமானம் நிறைவு பெற்று, தற்போது கோபுரத்தில், சுவாமிகளின் சிலைகள், பொம்மை சுதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், 5.25 ஏக்கர் பரப்பளவுள்ள கோவில் வளாகத்தில், சுற்றுச்சுவர், மலையை சுற்றிலும் கிரிவலப்பாதை, ரத வீதிகள் அமைக்கப்படுகிறது. ராஜகோபுரம் பகுதியில் இருந்து, மலைக்கோவிலுக்கு வரும் வழித்தடம், முழுவதும் மண் கொட்டப்பட்டு, மேடாக்கப்பட்டு, கல் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. குடிநீர், கழிப்பிடம், திருமண மண்டபம், அன்னதான மண்டபம் உள்ளிட்டவையும் அமைக்கப் பட்டு வருகிறது. மக்கள் நல அறக்கட்டளை தலைவர் ‘மெஜஸ்டிக்’ கந்தசாமி கூறுகை யில், “கோவில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆறு மாதத்தில் பணிகளை முடித்து, கும்பாபிஷேகம் நடத்தும் வகையில், பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம்,” என்றார்.