உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரத்தில் 5 ஆண்டுக்கு பிறகு அங்கபிரதட்சணம் செய்ய அனுமதி

சமயபுரத்தில் 5 ஆண்டுக்கு பிறகு அங்கபிரதட்சணம் செய்ய அனுமதி

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஐந்து ஆண்டுக்கு பிறகு இன்று முதல் அங்கபிரதட்சணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள பிரசித்த பெற்ற மாரியம்மன் கோவிலில், 2010ல் குடமுழுக்கு செய்வதற்கான பணிகள் துவங்கியபோது, கோவிலின் பிரகாரங்களும் சீரமைக்கப்பட்டது. இதனால், ஐந்துஆண்டுகளுக்கு மேலாக, பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கோவில் திருப்பணிகள் முடிந்து, கடந்த, பிப்ரவரி, 6ம் தேதி குடமுழுக்கு நடந்து, தற்போது கோவில் பிரகாரங்கள் விரிவாக்கப் பணிகளும் முடிந்துள்ளது. இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அங்கபிரதட்சணத்துக்கு, இன்று முதல், அனுமதிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அங்கபிரதட்சணம் தினமும் காலை, 5:30 மணி முதல் காலை 9:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். அங்கபிரதட்சணம் செய்யும் பக்தருடன், ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும். ’கோவிலின் கிழக்கு ராஜகோபுர வாசலில் உள்ள கொடிமரம் முன் துவங்கி, தெற்கு, மேற்கு, வடக்கு பிரகாரம் வழியாக வந்து, கிழக்கு பிரகாரம் கொடிமரம் முன் அங்கபிரதட்சணத்தை முடித்துக் கொள்ள வேண்டும்’ என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அங்கபிரதட்சணம் செய்ய வருபவர்கள் கோவில் கண்காணிப்பாளரிடம் அனுமதி சீட்டு பெற்று வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !