மலைக்கோட்டை கோவிலில் இன்று கார்த்திகை மகாதீபம்
திருச்சி: திருச்சி மலைக்கோட்டை கோவிலில் இன்று மாலை கார்த்திகை மகாதீபம் ஏற்ற அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது."பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை உலகில் என்றும் நிலைத்திருக்கும் இயற்கை சக்திகள் என்பதால் அவற்றை தெய்வநிலைக்கு உயர்த்தி வணங்கி வழிபடுவது வழக்கம். இவ்வகையில் சித்திரை முதல் நாள் மண்ணுக்கும், ஆடிப்பெருக்கு நீருக்கும், கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று நெருப்புக்கு வழிபாடு நடத்துவது ஐதீகம். இவ்வகையில் இன்று கார்த்திகை நட்சத்திரம் என்பதால் தமிழகமெங்கும் திருவண்ணாமலை உட்பட முக்கிய கோவில்களில் பெருஞ்ஜோதி எனப்படும் மகாதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்கவுள்ளது.திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலிலும் இன்று மாலை கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. இதற்கென உச்சிப்பிள்ளையார் சன்னதி அருகே அமைக்கப்பட்டுள்ள 50 அடி உயர இரும்புக்கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள ராட்சத கொப்பரையில் ஆயிரம் லிட்டர் எண்ணை, ஆறாயிரம் மீட்டர் நீள திரி மற்றும் 800 கிலோ பருத்தித் துணி ஆகியவை கொண்ட மகா தீபம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று காலை மட்டுவார் குழலம்மை, தாயுமானவர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கின்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் மாலை ஐந்து மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு உச்சிமலை பகுதிக்கு வருவர்.ங்கு தீப, தூப, நிவேதனங்களுக்குப்பின் இம்மூர்த்திகள் முன்னிலையில் மாலை ஆறு மணியளவில் வானவேடிக்கைகள் முழங்க மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் மேளதாளத்துடன் வீதிவலம் வருவர். கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு நேற்று மாலை மலைக்கோவில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் இளம்விளக்கு எனப்படும் சிறிய தீபம் ஏற்றி வைக்கப்படும். இந்த இளம்விளக்கிலிருந்து பெறப்படும் ஜோதியிலிருந்தே இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படும்.மகாதீபம் ஏற்றும் பணிகளை அறநிலையத்துறை மண்டல திருச்சி மண்டல இணை ஆணையர் (பொ) ஜெயராமன், உதவி ஆணையர் தங்கமுத்து ஆலோசனைப்படி, மலைக்கோட்டை கோவில் நிர்வாக அதிகாரி சித்ரா தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.