உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநாகேஸ்வரம் கோவிலில் ஓலைச்சப்பரத்தில் ஸ்வாமி அம்பாள் வீதியுலா

திருநாகேஸ்வரம் கோவிலில் ஓலைச்சப்பரத்தில் ஸ்வாமி அம்பாள் வீதியுலா

கும்பகோணம்: கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் நாகநாதசுவாமிகோவில் உள்ளது. இங்கு தனிசன்னதி கொண்டுள்ள ராகுபகவான் மங்களராகுவாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் நாகநாதசுவாமியை திருமால் பிரம்மா, இந்திரன், சூரியன், சந்திரன் முதலிய தேவர்களும், கௌதமர், பராசரர், மார்க்கண்டேயர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டு பேறு பெற்றனர். சிறப்புவாய்ந்த இத்தலத்தில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.அதன்படி, இவ்வாண்டும் கடந்த 2ம்தேதி காலை 8.25 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சிறப்பு புஷ்பலங்காரத்தில் கொடிமரம் முன் எழுந்தருள, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களுடன் கொடியேற்றம் நடந்தது. அன்று முதல் தினசரி காலை சுவாமி அம்பாள் பல்லக்கில் வீதியுலா நடக்கிறது.தினசரி இரவு வெள்ளி ஐந்தலை நாகவாகனம், கிளி வாகனம், பூதம், சிம்மம், கைலாசம், யானை, அன்னம், குதிரை, வெண்ணைத்தாழி என பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது.நேற்றுமுன்தினம் 6ம் தேதி மாலை சுவாமி அம்பாள் தனித்தனி ஓலைச்சப்பரத்தில் மின்விளக்கு அலங்காரத்துடன் வீதியுலா நடந்தது. இன்று 8ம் தேதி மாலை 5 மணிக்கு சீர்வரிசை, ஊஞ்சல், மாலை மாற்றுதல் வைபவங்களுடன் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மஞ்சத்தில் புறப்பாடு நடக்கிறது.வரும் 10ம் தேதி காலை 6.30 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளலும், தொடர்ந்து பக்தர்கள் தேர் வடம்பிடித்தலும் நடக்கிறது. விழாவின் முக்கிய திருநாளான 10ம் நாள் காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் வீதியுலாவும், தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு சூரியபுஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !