உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குட்டகம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா

குட்டகம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா

அவிநாசி: அவிநாசியை அடுத்த குட்டகம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில், ஏராளமானோர் பங்கேற்று, உடலில் சேறு பூசி, நேர்த்திக்கடன் செலுத்தினர். அவிநாசியை அடுத்த குட்டகத்தில், அத்தனூர் அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவிலில், அம்மன் திருக்கல்யாண உற்சவ பொங்கல் விழா, கடந்த, 14ல், பூச்சாட்டுடன் துவங்கியது. கடந்த, 18ம் தேதி, கம்பம் நடும் விழா, அதை தொடர்ந்து தினமும் கம்பம் சுற்றியாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சியும் நடந்தது. அம்மன் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. முன்னதாக முளைப்பாரி எடுத்து வந்த பக்தர்கள், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். விழாவில், மழை பெய்யவும், நாடு செழிக்கவும் வேண்டி ஏராளமான பக்தர்கள் உடலில் சேறு பூசியும், வேப்பிலை அணிந்தும் அம்மனை வழங்கி, நேர்த்திக் கடன் செலுத்தினர்.திருவிழா நிறைவாக மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !