உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்த பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம்: பக்தர்கள் பரவசம்

கந்த பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம்: பக்தர்கள் பரவசம்

திருப்பூர்: திருப்பூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழாவின் ஒருபகுதியாக, நேற்று திருக்கல்யாண உற்சவம், கோலாகலமாக நடைபெற்றது. காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், சுவாமி, அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் எழுந்தருளினார். தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹார விழா, நேற்று முன்தினம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, நேற்று மாலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், திருக்கல்யான வைபவத்தை கண்டு வழிபட்டனர். இன்று, மஞ்சள் நீராட்டு, சுவாமி திருமலைக்கு எழுந்தருளல் மற்றும் பாலிகை நீர்த்து சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது. திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சுப்ரமண்ய பெருமானுக்கு நேற்று காலை பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால், அபிஷேகம் நடந்தது. தொடந்து நடந்த சுப்ரமணியர் திருக்கல்யாண உற்சவத்தை, ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில் சுப்ரமணியர் கோவில், நல்லூர் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வர சுவாமி, சுப்ரமணியர் கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில், அலகு மலை முத்துக்குமாரசாமி கோவில், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில், உள்ளிட்ட கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

பக்தர்கள் அதிருப்தி: பல்லடம், மாதப்பூரில் உள்ள முத்துக்குமார சுவாமி திருக்கோவிலில், நேற்று திருக்கல்யாண வைபவம் நடந்தது. உரிய ஏற்பாடு செய்யப்படவில்லை என்று, பக்தர்கள் அதிருப்தியுடன் கூறினர். இதனால், பக்தர்கள் திருக்கல்யாணத்தை காண முடியாமல் வேதனைப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !