மயிலம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்
மயிலம் : மயிலம் முருகன் கோவில் கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா கடந்த 20ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு சுவாமிக்கு வழிபாடுகள் நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு பால், சந்தன அபிஷேகம் நடந்தது. கந்தசஷ்டி 6ம் நாள் திருவிழாவில் நேற்று இரவு 7:00 மணிக்கு பாலசித்தர் சந்நிதியில் முருகன் வேல் வாங்கும் காட்சியும், தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு சுப்பரமணிய சுவாமி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் விரதமிருந்த பக்தர்கள் சிறப்பு தரிசனத்தில் கலந்து கொண்டனர். உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.