தேரழந்தூர் ஆமருவி பெருமாள் கோயிலில் புதிய ரதம் வெள்ளோட்டம்
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூர் கிராமத்தில் 108 வைணவ திருத்தலங்களில் 10வது தலமும், பஞ்ச கிருஷ்ணாரன்ய சேத்திரத்தில் முதன்மையானதுமான ஸ்ரீ ஆமருவி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட இக்கோயிலில் புதிய தங்க முலாம் பூசிய ரதத்தின் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி கோயில் திருமங்கை மன்னன் மண்டபத்தில் அனுக்ஜை, வாஸ்து சாந்தி, அதிவாச ஹோமங்கள், பூர்ணாஹூதி,பிரதிஷ்டை, கும்ப புரோக்ஷனம் ஆகியவை செய் யப்பட்டு ரதத்தின் வெள்ளோட்டம் துவங்கியது.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ரதத்தை வடம் பிடித்துஇழுத்து வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரதம் கோயிலின் நான்கு பிரகாரத்தையும் வலம் வந்து நிலையை அடைந்தது. முன்னதாக மூலவரான ஆமருவி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜைகளை சீனிவாசன் பட்டாச்சாரியார் தலைமையிலானோர் நடத்தினர். எம்.எல்.ஏக்கள் பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன், சப்–கலெக்டர் பிரியங்கா பங்கஜம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன் மற்றும் தேரழந்தூரை சேர்ந்த இஸ்லாமியர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.