உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கடம் தீர்ப்பான் சரவணபவன்

சங்கடம் தீர்ப்பான் சரவணபவன்

முருகப்பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோயில் புதுக்கோட்டை மாவட்டம், ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோயில், இக்கோயிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜப மாலையும், மறுகையில் சின் மூத்திரையும் தாங்கிய கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். தமிழ்நாட்டில் முதன் முதலில் தங்கத் தேர் இழுக்கப்பட்டது, 1957 ஆம் ஆண்டு, பழனி முருகன் திருக்கோயில்தான். முருகப்பெருமானை ஒருமுறை மட்டுமே வலம் வருதல் வேண்டும். கந்தனுக்குரிய விரதங்கள் மூன்று அவை: வார விரதம், நட்சத்திர விரதம், திதி விரதம். அக்னி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலைவையே முருகன் திரு அவதாரம்.

முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை வதைத்த இடங்கள் மூன்று. அவை, சூரபத்மனை வதம் செய்தது திருச்செந்தூர், தாரகாசுரனை வதம் செய்த திருப்பரங்குன்றம், இவ்விருவரின் சகோதரனான சிங்கமுகாசுரனை வதைத்த போரூர்! முருகப் பெருமான் அழித்த ஆறு அசுரர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாத்சர்யம். திருமுருகன் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி ஆகியோர். இவர்கள் மீனாய் இருந்து, முருகப்பெருமான் அருளால் மீண்டும் மனிதர்களாக மாறினர். பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்கிற ஆறு குணங்களின் அம்சமே ஆறுமுகம்.

பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு முருகன் திருக்கோயிலில் சுவாமி, ஆறடி உயரத்தில் காட்சி தருகிறார். இக்கோயிலில் தெய்வானை கிரீடத்துடனும், வள்ளி குறத்தி கொண்டையுடனும் காட்சி தருகின்றனர். இக்கோலத்தை வேறு எந்த திருத்தலத்திலும் காண முடியாது. முருகப்பெருமானை வணங்க சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய் ஆகியவை உகந்த நாட்கள். திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் ஏழாம் நாளில், தங்கப் பல்லக்கில் எழுந்தருளும் முருகப்பெருமான், முன்புறம் ஆறுமுகன் திருக்கோலத்திலும், பின்புறம் நடராஜர் திருக்கோலத்திலும் காட்சி அளிப்பார். தமிழகத்தில் கழுகு மலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம் ஆகிய தலங்களில் முருகப்பெருமானுக்குக் குடைவரைக் கோயில்கள் உள்ளன.

செவ்வாய் தோஷத்தால் அவதியுறுபவர்கள், அதிகாலையில் நீராடி, மனத்தூய்மையுடன் சுப்பிரமண்ய அஷ்டகம் படிப்பது மிகுந்த பலனைத் தரும். முருகன் கங்கையால் தாங்கப்பட்டதால், ‘காங்கேயன்’ என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்ததால், ‘சரவணபவன் ’ என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால், ‘கார்த்திகேயன் என்றும்; சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால், ‘கந்தன் ’ என்றும் திருப்பெயர்கள் கொண்டான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !