தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேசுவரர் கோவிலில் உழவாரப்பணி
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு, அருணாசலேசுவரர் கோவிலில் நடந்த உழவாரப்பணியில், 190 பேர் பங்கேற்றனர். சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த, திருநாவுக்கரசு உழவார பணி தலைவர் அண்ணாமலை தலைமையில், ஆண்டுதோறும் திருவண்ணாமலை, அருணாசலேசுவரர் கோவிலில் தீப திருவிழாவின்போது, உழவாரப்பணி செய்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, இப்பணியில் ஈடுபட்ட வந்த இவர்கள், தற்போது தீப திருவிழா வருவதை முன்னிட்டு நேற்று, 190 பேர் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். இவர்கள், கோவிலில் உள்ள, மூன்றாம் பிரகாரத்தில் தூய்மைப்படுத்துதல் மற்றும் பிரதோஷ நந்தி மண்டபத்தில் உள்ள ரத விளக்குகளை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். உழவார அமைப்பை சேர்ந்தவர்கள், மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இப்பணிகளை செய்துள்ளனர்.