தேவிபட்டினத்தில் கடல் நீரில் மூழ்கிய நவகிரகங்கள்
தேவிபட்டினம்: தேவிபட்டினம் பகுதியில் கடல் கொந்தளிப்பால் நவகிரகங்கள் கடல் நீரில் மூழ்கியதால் நவகிரகங்களை சுற்றி வந்து தரிசனம் செய்வதில் பக்தர்கள் சிரமமடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நவபாஷாணம் அமைந்துள்ளது. இங்கு திருமண தடை, ஏவல் உள்ளிட்டவைகளுக்கு நிவர்த்தி வேண்டியும், முன்னோர்களுக்கு தர்பணம், திதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் இங்கு பரிகார பூஜை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலை கொண்டுள்ளதால் இப்பகுதியில் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாக உள்ளது.
நேற்று தேவிபட்டினம் நவபாஷாண பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டதால், நவகிரகங்கள் கடல் நீரில் மூழ்கின. இதனால் நவபாஷாணத்திற்கு வருகை தந்த பக்தர்கள் கழுத்து அளவு தண்ணீரில் நவகிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் தண்ணீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டதால் கடல் நீரில் இறங்கி நவகிரகங்களை சுற்றிவர அச்சமடைந்து நடைமேடை வழியாகவே சுற்றி வந்து தரிசனம் செய்தனர். மேலும் நவபாஷாண பகுதியில் கடல் கொந்தளிப்பாக இருந்ததால் கடலுக்குள் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.