கூர்ம அவதாரக் கோயில்
ஒரு பாறாங்கல்லை கையில் நாம் வைத்திருந்தாலே பாரம் தாங்காமல் கீழே போட்டு விடுவோம். ஒரு மலையையே தன் முதுகில் தாங்க வேண்டுமென்றால் மனிதர்களால் முடியுமா? ஆனால் பகவான் தன் பக்தர்களைப் பாதுகாக்க அத்தகைய சிரமத்தையும் ஏற்பார். உலகைக் காக்க திருமால் எடுத்த தசாவதாரத்தில் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம். இதற்கு ஆமை என்று பொருள். ஆமை ஆபத்து வரும்போது தன் உடலை ஓட்டுக்குள் அடக்கி பாதுகாப்பது போல் மனிதனும் கெட்ட சிந்தனை வரும்போது தன் மனதை கட்டுப்படுத்தி நலம் பெறவேண்டும் என்பதை உணர்த்த பகவான் அவதாரம் எடுத்தார். அசுரர்களை அழித்து தேவர்களைக் காக்க எடுத்த அவதாரம் கூர்ம அவதாரம். ‘ஆமை புகுந்து வீடு உருப்படாது என்பர், திருமால் இந்த அவதாரம் எடுத்தது சரிதானா என்று தோன்றும். ஆனால் இல்லாமை எனும் வறுமை, கல்லாமை ஆகியவை புகக்கூடாது என்பதையே இப்படிக் கூறினார்கள். தசாவதாரங்களில் நரசிம்மர், ராமர், கிருஷ்ணர் முதலான அவதாரங்களுக்கு பல கோயில்கள் உள்ளன. ஆனால் இரண்டாவது அவதாரமான கூர்மத்திற்கு ஆந்திர மாநிலம் காகுளம் மாவட்டத்தில் கூர்மத்தில் மட்டுமே கோயில் உள்ளது. மதுரை அழகர் கோயில் சுற்றுப்பிராகார சன்னதியில் திருமால் ஆமை வடிவத்தில் இருப்பதைக் காணலாம்.