சபரிமலையில் அன்னதான நன்கொடைக்கு சிறப்பு தரிசனம் ரத்து
சபரிமலை: சபரிமலையில், அன்ன தான நன்கொடைக்கு சிறப்பு தரிசனத்தை தேவசம் போர்டு ரத்து செய்துள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டின் புதிய உறுப்பினர்கள் முதல் கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று தலைவர் பத்மகுமார் தலைமையில் நடைபெற்றது. உறுப்பினர்கள் ராகவன், சங்கரதாஸ் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின்னர் தலைவர் பத்மகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:திருவிதாங்கூர் தேவசம்போர்டில் பொருளாதார நெருக்கடி இல்லை. சபரிமலையில் நாளை(24ம் தேதி) தேவசம்போர்டு ஊழியர்கள், ஐயப்பா சேவா சங்கம், போலீசார் இணைந்து துப்புரவு பணி மேற்கொள்வர். அன்னதானத்துக்காக நன்கொடை வழங்குபவர்களுக்கு சிறப்பு தரிசனம், என்ற கடந்த தேவசம் போர்டின் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுவரை கட்டணம் செலுத்தியவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.சபரிமலைக்கு 63 ஏக்கர் வன பூமி உண்டு. ஆனால் 55 ஏக்கர் தான் தேவசம்போர்டு வசம் உள்ளது.6 நாட்களில் வருமானம் 23 கோடியே 7 லட்சத்து 67 ஆயிரத்து 223 ரூபாய் ஆகும். கடந்த ஆண்டு இதே கால அளவில் 16 கோடியே 47 லட்சம் ரூபாயாக இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.