சென்னிமலை முருகன் கோவில் தீர்த்தக்கிணறு ஆக்கிரமிப்பு
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில், தீர்த்தக்கிணறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை மூடி, கட்டடம் கட்டும் முன், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னிமலையில், மலை மீது அருள்பாலிக்கும் முருகப்பெருமான், மலைப்பகுதி மற்றும் சென்னிமலை நகர பகுதிகளில் இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் என, 24 வகையான தீர்த்தக் கிணறுகள் இருந்தன. இவற்றில் பல பராமரிப்பின்றி அழிந்து விட்டன. தற்போது மிக முக்கிய தீர்த்த கிணறாக, பார்க் சாலையில், மலை அடிவார பாதையில், சுப்பிரமணிய தீர்த்தம் அமைந்துள்ளது. கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், கிணற்றை சுற்றி வழிபாடு நடத்தி, படி வழியாக இறங்கி, தீர்த்தம் எடுத்து முருகனுக்கு அபி?ஷகம் செய்து வழிபட்டனர். ஆவணி மாதத்தில் நடக்கும், பிட்டு திருவிழா, இந்த கிணற்றுக்கு அருகில் தான், வைகை கரை அமைத்து, சாமி புறப்பாடு நடக்கும். தற்போது தீர்த்த கிணற்றை சுற்றி, இலவச பட்டா பெற்ற சிலர், கிணற்றின் சுற்றுச்சுவர் மீது கட்டடங்கள், ஆக்கிரமிப்பு செய்து, பக்தர்கள் வர இயலாத அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். இதை தடுக்க வேண்டிய சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, பேரூராட்சி நிர்வாகம் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. இதன் பின்னணியில், பணம் பாய்ந்ததே காரணம். அள்ளித்தரும் அளவுக்கு ஏற்ப, அரசுத்துறை அதிகாரிகள், தாராளம் காட்டி வருவதாக, பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தீர்த்த கிணற்றை, ஆக்கிரமிப்பாளர்கள் மண் கொட்டி மூடி, கட்டடம் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அந்த அளவுக்கு போகாமல், கட்டடம் எழும்பும் முன், தீர்த்த கிணற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பக்தர்கள் தீர்த்தம் எடுத்து செல்லவும், கிணற்றை சுற்றி வந்து வழிபாடு செய்யவும், நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.