சபரிமலையில் நடக்கும் பூஜைகள்
ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்றும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறக்கப்பட்டு மண்டல பூஜை நடத்தப்படுவது வழக்கம். மண்டல காலத்தில் காலை 4 மணிக்கே சபரி மாலையில் நடை திறக்கப்பட்டுவிடும் பிரதான தந்திரி, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து முடித்ததும் கணபதி ஹோமமும், அது முடிந்ததும் கணபதிக்கும் நாகராஜாவுக்கும் பாயச நிவேதனமும் செய்யப்படும் அடுத்து பிரசன்ன பூஜை, தீபாராதனை, தொடர்ந்து நண்பகல் வரை சுவாமிக்கு நெய்யபிஷேகம் செய்யப்படும். பின்னர் கோயிலை சுத்தம் செய்துவிட்டு மத்தியான பூஜைகளை தந்திரி தொடங்குவார். அப்போது அரவணைப் பாயசம் நிவேதனம் செய்யப்படும். பிறகு நடை அடைக்கப்பட்டு மீண்டும் 4 மணிக்கு நடைதிறக்கப்படும். அதன்பிறகு புஷ்பாபிஷேகமும், தீபாராதனையும் நடத்தப்படும். இரவு பூஜையில் நெய் அப்பமும், பானகமும், நிவேதனம் செய்யப்பட்டு கோயில் சுத்தம் செய்யப்பட்டு நடைசாத்தப்படும். நிறைவில் ஐயப்பனை உறங்கச் செய்ய தாலாட்டாக ஹரிவராசனம் பாடுவார்கள்.